நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், தனது மூக்கு அறுவை சிகிச்சை தொடர்பாக சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். திரையுலகில் வாய்ப்புகளைப் பெறுவதற்காகவே அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
நடிகை சுஹாசினியுடன் 'கலாட்டா தமிழ்' ஊடகத்திற்காக இடம்பெற்ற உரையாடலில், தனது ஆரம்பகால திரைப்பயணம் மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அப்போது, சிறுவயதில் இருந்தே ஸ்ருதியின் மூக்கு வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததை நினைவுகூர்ந்த சுஹாசினி, திரையுலகில் நுழைவதற்காக இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசன், சினிமா வாய்ப்புகளுக்காகவோ அல்லது குறிப்பிட்ட அழகுத் தோற்றத்தைப் பெறுவதற்காகவோ தான் அந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ளவில்லை என்றும், தனக்குப் பிடித்திருந்ததாலேயே அதனைச் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மூக்கு அறுவை சிகிச்சை என்பது மிகவும் வேதனையான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது தன்னை அதிகமாகத் தொந்தரவு செய்தால், அந்த அறுவை சிகிச்சையின் வலியை அனுபவிக்குமாறு நகைச்சுவையாகக் கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையை மறைக்க விரும்பவில்லை!
தான் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் பெண் பிரபலங்களில் ஒருவராக இருந்ததாகவும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
