நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 250 நாட்டு படகுகள், 100 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தற்போது ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும்பி கரைப்பகுதியை பலமாக தாக்கி வருகின்றன.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் துறைமுகம், மீன் ஏலக்கூடம் ஆகியவை வெறிச்சோடி காணப்படுகிறது. பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் மடவாமேடு என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடற்கரையில் சுமார் 4 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கடற்கரைக்கு சென்று கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கடற்கரைக்கு வந்த வனத்துறையினர் திமிங்கலத்தை பார்வையிட்டனர். அப்போது திமிங்கலத்தின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அதன் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் இந்த திமிங்கலம் கப்பலில் அடிபட்டு இறந்ததா? அல்லது பிற திமிங்கலங்களுடன் ஏற்பட்ட மோதலில் இறந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்துக்கு வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், திமிங்கலம் இறந்து எத்தனை நாட்கள் ஆனது? என ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து கடற்கரையில் பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.
சுமார் 4 டன் எடையுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.