இந்திய – சீன எல்லையில் நிலவிவரும் பதற்றத்தால் இந்திய போர் விமானங்கள் எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானப்படை தளபதி விமானத்தளங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக சுகோய், எம்.கே.ஐ, மிராஜ், மற்றும் ஜாகுவார் போர் விமானக் கடற்படை ஆகியவற்றை மேம்பட்ட நிலைகளுக்கு இந்தியா நகர்த்தியுள்ளது.
இதனிடையே எல்லையில் உள்ள அனைத்து விமானத்தளங்களின் செயல்பாடு, தயார்நிலை தொடர்பாக இரண்டு நாட்கள் தங்கி விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பட்டோரியா ஆய்வு செய்யதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கிழக்கு லடாக் பகுதியில் படை மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு விமான ஆதரவை வழங்குவதற்காக, அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் தரைப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.